ஆலய வரலாறு

ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் புத்தூர் பதியினிலே மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை தன்னகத்தே கொண்டு வேண்டுவாருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கிக் கொண்டிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சுவாமி சமேத ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.இது புத்தூர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 


பல்லவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்துசமய மறுமலர்ச்சியை தொடர்ந்து சமண சமயம் போன்றன வீழ்ச்சியுற்றதாகவும் நாயன்மார்களின் தேவார திருவாசகங்கள் மற்றும் ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்கள் தோற்றம் பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.இந்தக் காலத்தில் புதிய ஆலயங்கள் தோற்றம் பெற்றதாகவும் பழைய ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.தக்ஷ்ண கைலாய புராணத்திலே கூறப்படுகின்ற கோவில் இந்தக் கோவிலையும் அதில் குறிப்பிடப்படுகின்ற நீரூற்று நிலாவரை வாவியினையும் குறிக்கின்றது.இந்தக் கோவிலுக்கும் வாவிக்கும் இடையே தூரம் ஏறக்குறைய 1/2 மைல் ஆகும்.வரலாற்று காலம் தொடக்கம் இந்த வாவியில்தான் தீர்த்தோற்சவம் இடம்பெற்றாலும் காலவோட்டத்தில் இது மருவி ஆலயத்தோடு அமைந்துள்ள திருக்குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது.

போர்த்துக்கேயர் மற்றும் அவர்களை தொடர்ந்து ஒல்லாந்தரும் இலங்கைக்கு வருகை தந்ததும் அதனைத் தொடர்ந்து இந்து சமயத்தில் ஏற்பட்ட தாக்கங்களும் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் இந்த ஆலயமும் அழிக்கப்பட்டது.ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் நிலவிய சாதாரண சூழல் அழிவடைந்த ஆலயங்களை புனரமைக்கவும் புதிய ஆலயங்கள் அமைக்கவும் உகந்த காலப்பகுதியாக அமைந்தது.

ஏற்கனவே அழிக்கப்பட்ட ஆலய சுற்றுப்புறங்கள் யாவும் புல் நிலமாகவும் பிரப்பம் பற்றை நிறைந்தும் காணப்பட்டது.அந்தப் பகுதியில் கிராம வாசிகள் தமது மாடுகளை மேய்த்து வந்தனர்.அங்கு வேளாண்மை தொழில் செய்த சிதம்பரநாதர் என்பவரும் அங்கு தமது மாடுகளை ஒரு சிறுவனைக் கொண்டு மேய்த்து வந்தார்.ஒரு நாள் மாலைப்பொழுதில் ஒரு கிழவி பொல் ஊன்றிவந்து பிரப்பம் பற்றைக்குள் மறைந்ததை அந்தச் சிறுவன் கண்டு தனது எஜமானரிடம் கூறினான்.பின்னர் சிதம்பரநாதர் அந்தப் பிரப்பம் பற்றையை சென்றுபார்த்து வழிபட்டுவிட்டுச் சென்றார்.அன்றிரவு அவரின் சொப்பனத்தில் தோன்றி"பிரப்பம் பற்றைக்குள் பிலா ஒன்று முளைத்துள்ளது அதில் என்னை ஆதரி' என்று கூறிச் சென்றது.நடந்தவற்றை சிதம்பரநாதர் ஊராரிடம் கூற ஊரவர்கள் சொப்பனத்தில் தோன்றியது எமை ஆளும் உமையாள் என முடிவு செய்து அந்தப் பலாமரம் அமைந்திருந்த பிரப்பம் பற்றை சூழல் துப்புரவு செய்யப்பட்டு கோவில் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.அப்போது பழைய கோவிலின் இடிபாடுகளையும் கண்டனர்.அங்கு கோவில் அமைக்கப்பட்டு அது சக்தி தலமாக வழிப்பட்டு வந்தனர்.

கோவில் அமைத்து பூஜைகள் இடம்பெற்று வரும்போது கோவிலை விசாலமாக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அதாவது முன்பு இடிக்கப்பட்ட கோவில் போன்ற கோயில் அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கில் இடம்பெற்றன. இந்த வகையில் பலா வடிவில் அம்மன் விக்கிரகமும் அதன் சுற்றுப்புறங்களில் சிவன், விசாலாட்சி அம்மாள்,விநாயகர்,வைரவர் விக்கிரகங்கள் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் பிலாவடி அம்மன் ஆலயத்தில் அலங்கார உற்சவம் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நவசைலேஸ்வரம் என்கின்ற நிலாவரை வாவியிலும் இடம்பெற்றது. 1876 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அர்த்த மண்டப, மகா மண்டப, தரிசன மண்டபப் பணிகளை தொடர்ந்து இது சிவாலயமாக மாறலாயிற்று.

தீர்த்தத் திருவிழாவிற்கு நிலாவரைக்குச் செல்வதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக 1896 ஆம் ஆண்டு ஆலயத்துக்கு அருகே திருக்குளம் அமைக்கப்பட்டது. இதில் ஆடிப்பூர தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெறுகிறது. 1903 ஆம் ஆண்டு பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி கோவில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு வருடங்களாக இடம்பெற்ற புனருத்தாரண வேலைகளைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு அப்பர் சுவாமிக்குரிய சித்திரை சதயத்தில் முதலாவது கும்பாபிஷேக திருவிழா இடம்பெற்றது. ஆரம்பம் முதல் புனருத்தாரண, பரிபாலன வேலைகளை பல பெரியார்கள் முன்னின்று நடத்தி வந்தனர். 1911 ஆம் ஆண்டுக்குப் பின் ஆலயத்தினை திரு மழவராயர் என்பவர் பரிபாலனம் செய்ததோடு அதற்குத் தனது சொத்தின் பெரும் பகுதியை தர்மசாதனம் செய்தார். அவரின் பின் அவர் தம் புதல்வன் கந்தையா பரிபாலித்து வந்தார். அவரின் காலத்தில் பஞ்சலிங்கங்கள், சனீஸ்வரன், சந்தான கோபாலர், சூரிய சந்திரன், தெட்சணாமூர்த்தி மற்றும் வெண்கலத்தினால் செய்யப்பட்ட தில்லை நடேசர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகன், சோமஸ்கந்தர், அம்மன், விநாயகர் ஆகியனவும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கந்தையா தனது சொத்துகளின் பெரும் பகுதியை தர்மசாதனம் செய்து வைத்தார்.

இவ்வாறு தமிழகத்தில் இருந்த மூவேந்தர்கள் வளர்த்த சைவத்தினையும் தமிழையும் ஆறுமுக நாவலர் வளர்த்த சைவத்தையும் தமிழையும் பிற்பட்ட சந்ததியினர் அறியும் படியாக மேற்குறிப்பிட்ட தந்தையும் மகனும் செய்தனர். பெரிய புராண கலாசாரம் வாழவும் வளரவும் வழிவகுத்ததுடன் அறனாலயம், அறிவாலயம், அன்னசத்திரம் என்பனவும் அமைக்கப்பட்டன. அறுபத்துமூன்று நாயன்மார்களின் குருபூசையும் சிறப்பாக இடம்பெற வழிசமைக்கப்பட்டது.

இவ்வாறாக காலங்கள் கடந்து சென்று கொண்டிருந்த போது 1939 ஆம் ஆண்டு கார்த்திகை பூர்வபக்க ரேவதியில் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. பூங்காவன உற்சவம் என்பது இந்த ஆலயத்திற்கே சற்று விசேடமானது. கோவிலில் இருந்து 250 யார் தொலைவில் உள்ள பூந்தோட்டத்தில் உமையாள் சிவனை நோக்கி தவமிருக்கவும் பின் சிவன் வந்து அழைத்துச் செல்வதும் தத்ரூபமாகக் கொண்டாடப்பட்டது.

1951 ஆம் ஆண்டு முற்றிலும் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு சித்திரத் தேரும் 1956 ஆம் ஆண்டு இந்திய கலைஞர்களைக் கொண்டு திருமஞ்சமும் செய்விக்கப்பட்டது. காலங்கள் ஓட ஓட 1989 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 18 ஆம் திகதி விசாக நட்சத்திரத்திலும் 1999 ஆம் ஆண்டு ஆனிமாதம் 12 ஆம் திகதி அத்த நட்சத்திரத்திலும் 2008 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17 ஆம் திகதி சுவாதி நட்சத்திரத்திலும் மகா கும்பாபிஷேகங்கள் இடம்பெற்றன. இங்கு சித்திரை வருடப்பிறப்பு உற்சவம் முதல் கொண்டு வைகாசி விசாகம், ஆனி உத்தரம் (சிவன் மகோற்சவம்), ஆடிப்பூரம் (அம்மன் மகோற்சவம்), ஆவணி மூலம், புரட்டாதி சனி, நவராத்திரி (நவராத்திரி மானம் பூ காரைகிடல் வைரவர் ஆலயத்தில்), ஸ்கந்த சஷ்டி, கேதார கௌரிவிரதம், தீபாவளி, கார்த்திகை விளக்கீடு, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், தை அமாவாசை, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்தரம், பிரதோஷ விரதங்கள், பௌர்ணமி விரதங்கள், அமாவாசை விரதங்கள், நடேசர் அபிடேகங்கள், நாயன்மார் குருபூசைகள் என்பன சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாலத்திற்கும் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, புத்தூர் அன்னசத்திரம், நல்லூர் கதிர்வேலாயுத சுவாமி கோவில் மற்றும் நல்லை ஆதீனம் என்பவற்றுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்புகள் இருக்கின்றன. இவ்வாறாக உள்ள இந்த ஆலய வரலாற்றில் அடியார்களின் பங்களிப்பும் பரிபாலகர்களின் பங்களிப்பும் சமயக் கிரியைகளை முன்னின்று நடத்தும் சிவாச்சாரியார்களின் பங்களிப்பும் முக்கியமானது.